இடைநீக்கம் செய்யப்பட்ட நவல்பட்டு விஜியுடன் உறவாடும் நிர்வாகிகள் – தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கட்டுக்கோப்பும், கண்ணியமும் நிறைந்த கட்சிதான், திராவிட முன்னேற்றக் கழகம். ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அடிப்படை உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அதிகாரம் தாங்கிய அமைச்சராக இருந்தாலும் சரி, கட்சி மேலிடம், அத்தனை பேரிடமும், கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டு, விதிகளை மதிப்பதை எதிர்பார்க்கும். திமுக இவ்வளவு ஆண்டுகளாகியும், செல்வாக்குக் குறையாமல், அதே கம்பீரத்துடன் நடைபோடுவதற்கு இதுவும் ஒரு காரணம். பதவிக்கு வந்த சமயத்தில் கூட, தனது அமைச்சர்களிடம், மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஸ்டாலின் , இதே கருத்தைத்தான் வலியுறுத்தி இருந்தார்.ஆனால், இதற்கு மாறாக, திருச்சி திமுகவில், கட்சிக்குள் நடைபெறும் சில திரைமறைவு வேலைகள், கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், தற்போதைய கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் , திருவரம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அது ஏற்க முடியாமல், அவரது பெயருக்கு களங்கம் பிறப்பித்தே ஆக வேண்டும் என்பதற்காக, கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றியவர்தான், நவல்பட்டு விஜி. இதனைச் செயல்படுத்த, சமூக வலைதளங்களில், அவரைப் பற்றிய அவதூறுக் கருத்துக்களை பரப்பும் அளவுக்கு தரம்தாழ்ந்த செயல்களில், நவல்பட்டு விஜி ஈடுபட்டார்.
இது மட்டுமின்றி, எதிரணியிலிருந்த அதிமுக வேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்து, அதற்குரிய காரியங்களை, முன் நின்று செயல்படுத்தினார். அமைச்சர் அன்பில் மகேஷ் தோற்கடித்தே தீருவேன் என சமூக வலைதளங்களில் சவாலே விட்டார். இது கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கட்சி ஒரு முடிவெடுக்கும் பட்சத்தில், அதற்கு மதிப்பளித்து, அந்த வேட்பாளரின் வெற்றிக்காக உழைப்பது தானே அடிப்படைத் தொண்டனுக்கு அழகு. ஆனால் மாறாக, கட்சியைப் பற்றிக் கவலைப்படாது, சுயநலமாக, அவர் செயல்பட்டது, திமுக தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பலையைக் கிளப்பியது. எல்லாவற்றிலும், முறையான நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் திமுக, இதில் மட்டும் கோட்டை விடுமா?! நவல்பட்டு விஜி, ஒழுங்கு நடவடிக்கையாக, கட்சியின் அடிப்படைத் தொண்டர் பொறுப்பிருந்து, தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவர் மீதான விசாரணை, இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது எல்லாவற்றையும் மீறி பல காவல்நிலையத்தில் தீமுகாவினர் பல கொடுத்த வழக்குகளும், அவரின் மேல் இன்றும் நிலுவையில் தான் உள்ளது.

click the image to chat on whatsapp
பொதுவாக, கட்சித் தலைமையால், நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவர், இப்படி கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டு, அவர்மீது விசாரணையும் நடைபெற்று வரும் பட்சத்தில், அவரோடு மற்ற தொண்டர்கள், எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது, திமுகவின் எழுதப்படாத அடிப்படை விதி.
அடிப்படை தொண்டர்களே, இதை கவனத்தில் கொண்டுதான் நடப்பார்கள். அப்படி இருக்க, சமீபத்தில் நடந்த தனது பிறந்த நாள் விழாவில், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, நவல்பட்டு விஜியைக் கலந்து கொள்ள வைத்ததும், இருவரும் கேக் ஊட்டி விட்டுக் கொண்டதும், திமுக தொண்டர்கள் மத்தியில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கிய ஒருவரோடு, அதுவும் கட்சி அலுவலகத்தில் வைத்தே இந்தக் காரியத்தை வைரமணி செய்ததுதான் நடுநிலை திமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைக்காக, கட்சி மேலிடத்தின் விசாரணை வளையத்துக்குள் இருக்கும் ஒருவரோடு, முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு நிர்வாகியான வைரமணி அவர்கள், உறவு பாராட்டுவது, தவறு என்றும், இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயல் என்றும் கொந்தளிப்பில் உள்ளனர், கட்சியினர். இது கட்சியின் தலைமைக்குக் கொண்டு செல்லப்படுமேயானால், விளைவுகள் பயங்கரமாக இருக்கலாம், என்பதே தற்போதைய திருச்சி திமுக வட்டத்திலும் சமூக வலை தளத்திலும் அடிபடும் பேச்சாக இருக்கிறது.
திமுக தலைமை என்ன செய்ய போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
