தி.மு.க.விற்கு திருப்புமுனை தந்த திருச்சியின் மீது தீராத காதல் கொண்டவர் கலைஞர் – சிறப்புப் பார்வை
தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு இன்று 98வது பிறந்த நாள். தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.திமு கழக வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள், மாநாடுகள் நடந்திருக்கிறது.இவை எல்லாவற்றையும் விட திருச்சி மாவட்டத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் திமுகவிற்கும், கலைஞருக்கும் பெருமை சேர்ப்பதாகவும், புகழ் சேர்ப்பதாகவும் அமைந்திருந்தது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலைஞர் தனது இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்க வைத்திருந்தார் என்றபோதிலும் திருச்சி மாவட்டத்திற்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.இதற்கு காரணம் அவர் திருச்சியை அதிகமாகவே நேசித்தார். இதற்கு பல காரணங்கள் உண்டு.15.7.1953ம் ஆண்டு திருச்சி மாவட்டம் கல்லக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கலைஞர் தலை வைத்து படுத்த போராட்டம் டெல்லி அரசையே அதிர்ச்சியடைய வைத்தது.துப்பாக்கிச்சூடு நடத்தி 2 பேர் உயிரிழந்த நிலையிலும் கலைஞர் போராட்டத்தை கைவிட மறுத்து உறுதியாக நின்றதால் அரசே பின்வாங்கியது.1957ம் ஆண்டு முதன்முதலாக குளித்தலை தொகுதியில் (அப்போதைய திருச்சி மாவட்டம்) சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார்.அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அவர் வெற்றியை மட்டுமே கண்டார். எதிர்க்கட்சியினருக்கு தோல்விகளையே பரிசாக தந்தார்.1956ம் ஆண்டு மே மாதம் 17ந்தேதி திருச்சியில் திமுகவின் 2வது மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தான் திமுக தேர்தலில் போட்டியிட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.1967ல் திமுக ஆட்சியை பிடிக்க 1957ல் திருச்சியில் நடந்த திமுக மாநாடு தான் காரணம்.1970ம் ஆண்டு திருச்சியில் திமுக மாவட்ட மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தான் முதல்வர் கருணாநிதி திமு கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை தந்தார்.இந்த உலகம் இயங்க பஞ்சபூதங்கள் எப்படி அத்தியாவசியமானதோ அதுபோல திமு கழகத்திற்கு இந்த ஐம்பெரும் முழக்கங்கள் உயிர்மூச்சாக விளங்குகிறது.2014ம் ஆண்டு திருச்சி பிராட்டியூரில் திமுகவின் 10வது மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டு அரங்கு திரைப்பட அரங்குகள் போல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கை பார்க்கவே 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்திருந்தனர்.மாநாட்டு அரங்கை பார்த்த கருணாநிதி மாநாட்டு ஏற்பாட்டாளர் கே.என்.நேருவை வெகுவாக பாராட்டினார்.திருச்சி என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு என்று புகழ்ந்தார்.இதுவரை திமு கழகம் 10 மாநில மாநாடுகளை நடத்தியுள்ளது. அதில் 5 மாநாடுகள் திருச்சியிலேயே நடத்தப்பட்டது.கடந்த பிப்ரவரி மாதமும் திருச்சியில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தான் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 உறுதிமொழிகளை தந்தார்.திருச்சியை கலைஞர் அதிகமாக நேசித்ததால் தான் அதிகமான மாநாடுகளை திருச்சியில் நடத்தினார். 2006 – 11ல் முதல்வராக இருந்த கருணாநிதி திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தனது எண்ணத்தின்படியே கோட்டை போல நிர்மாணித்து உருவாக்கி திறந்து வைத்தார். திருச்சி மக்களின் உயர்கல்விக்காக திருச்சியில் மத்திய அரசின் ஐஐஎம் கல்வி நிறுவனத்தை கொண்டு வந்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருச்சி பத்திரிகையாளர்களை கலைஞர் அதிகம் நேசித்தார்.திருச்சி பத்திரிகையாளர்கள் “திரிச்சி” போட மாட்டார்கள் என்று பலமுறை கூறியிருக்கிறார்.மேற்கண்ட சம்பவங்களால் கலைஞர் திருச்சியை அதிகம் நேசித்தார் என்பது தெளிவாகிறது.கலைஞரை போல அவரது மகனும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும் திருச்சி மீது அதிக அன்பு உண்டு. அதற்கு கைமாறாக தான் திருச்சி மக்கள் நவரத்தினங்களையும் (9 தொகுதிகள்) முதல்வருக்கு பரிசாக அளித்திருக்கிறார்கள்.
