வீட்டின் பூட்டை உடைத்து 29 கிராம் தங்கநகை திருட்டு

திருச்சி, மே 25 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மேலரசூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, கடிகாரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
புள்ளம்பாடி அருகே மேலரசூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (25). இவருடைய கணவர் புருஷோத்தமன். தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.சித்ராவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் புள்ளம்பாடி அருகே உள்ள முதுவத்தூர் கிராமத்தில் உள்ள தன் தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி மேலரசூரில் உள்ள தன் வீட்டை சுத்தம் செய்வதற்காக சித்ரா வந்துள்ளார். பின்னர் 22 ஆம் தேதி மீண்டும் தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் சித்ராவிற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 29 கிராம் தங்கநகை, ஒரு கோல்டு கடிகாரம் 5 கிராம் வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச சென்றது தெரியவந்தது.
இது குறித்து சித்ரா கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கல்லக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.