ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

0 55
voc

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நேற்று முதல் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. இதையொட்டி நேற்று முதல் புறப்பாடாக, உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சந்தன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 2-வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்பித்தனர். இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2 மணிவரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பெருமாள் முன் பட்டர் படித்தார். பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2-ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அவ்வாறு நம்பெருமாள் படியேறியபோது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவில் இருந்து விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!