சஞ்சீவி நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

0 16
Stalin trichy visit

திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.

மேலும் அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், வேங்கூர், கல்லணை உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்களின் தேவைக்காக திருச்சி சென்னை பைபாஸ் காலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் கடந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை பைபாஸ் சாலையில் அதிவேகத்தில் வரக்கூடிய வாகனங்களால் தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன.

இதனால் தங்கள் பகுதியில் பைபாஸ் சாலையை கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் இதற்காக தீர்வு காணப்படும் என அறிவித்தனர்.

ஆனால் இதுவரை அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காததால் தொடர்ந்து விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை 20 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண்பதாக காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

திருச்சி கிழக்கு தாசில்தார் விக்னேஸ்வரன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் உதவி பொறியாளர் அசோக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது நான்கு மாதத்திற்குள் இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் தங்கள் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தராமல் காலம் தாழ்த்தினால் மீண்டும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே சாலை மறியல் நடைபெறுவதற்கு முன்பு அந்த பகுதியில் முன்னே சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகி ஒன்றுடன் ஒன்று சிக்கியது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.