வீரப்பூர் பொன்னர் – சங்கர் கோவில் வேடபரி விழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க பெரியகாண்டியம்மன், பொன்னர்-சங்கர், தங்காள், மந்திரம் காத்த மாகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கோவில்கள் உள்ளது. கொங்கு நாட்டுமக்கள் குலதெய்வமாக வழிபடும் இந்த கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மாசிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னர் குதிரை வாகனத்தில் சென்று அம்புபோடும் வேடபரி திருவிழா இன்று மாலை நடந்தது. வீரப்பூர் பெரியக்காண்டியம்மன் கோவிலில் இருந்து சாம்புவன் காளை முன்செல்ல அதைத் தொடர்ந்து பொன்னர் குதிரை வாகனத்தில் கையில் அம்புஏந்திய படி செல்ல, அதன் பின்னர் வெள்ளை யானைவாகனத்தின் மீது அருள்மிகு பெரியகாண்டியம்மன் அமர்ந்து செல்லவும் கடைசியாக (பொன்னர், சங்கரின் தங்கை) தங்காள் குடத்தில் தீர்த்தம் எடுத்து சென்று 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனியாப்பூர் குதிரைக்கோவிலில் பொன்னர் அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சி நடந்தது. அம்புபோடும் இடம் வரை வழியெங்கும் குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற சுவாமிகளின் மீது பக்தர்கள் பூக்களையும், பூமாலைகளையும் மழையாய் தூவி in சுவாமிகளின் அருள்பெற்றனர்.
விழாவில் கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், கோவை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். இதனால் வீரப்பூர் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ட்ரோன் கேமரா மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
வேடபரி நிகழ்ச்சியை தொடர்ந்து நாளை 28 ம்தேதி காலை பெரியகாண்டியம்மன் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.