துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப். 4 திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திருவானைக்காவல் சன்னதி வீதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், திருச்சி நாடாளுமனற் தொகுதிக்குட்பட்ட மணப்பாறையில் சிப்காட் தொழிற்சாலை, அந்தநல்லூர் பகுதியில் ரூ.3 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ.20 கோடியில் சிறீரங்கத்தில் 42 ‘புதிய `தார்ச் சாலைகள், ரூ. 105 கோடியில் காவிரியில் புதிய பாலங்கள், சிறீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தின் கீழ் இதுவரை 460 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதில் திருச்சியில் மட்டும் 21 கோடியே 45 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அண்டை மாநிலங்களில் செயல் படுத்தி வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் உள்ள குறைகள் விரைவில் சரிசெய்யப் படும். பாஜக ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ரூ. 500-க்கு எரிவாயு உருளை, ரூ. 75-க்கு பெட்ரோல், ரூ.65-க்கு டீசல் வழங்கப்படும். அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும். எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்ற இந்தியா கூட்டணி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.