சிறப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் 11 பேருக்கு நீதிமன்ற காவல்
திருச்சி, நவ.20 திருச்சி சிறப்பு முகாம் கதவுகளை உடைத்து தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் 11 பேருக்கு நீதிமன்ற காவல்.
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினரை அடைத்து வைக்க சிறப்பு முகாம் அமைந்துள்ளது. அங்கு சட்டவிரோதமாக நம்நாட்டிற்குள் குடியேறியவர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்தவர்கள், போலிபாஸ்போர்ட் வைத்திருத்தல், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகள் தங்களை விடுவிக்க வேண்டும் என கூறி சிறப்பு முகாம் கதவுகளும் அங்குள்ள பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இந்நிலையில், அங்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், முகாம் கதவுகளை உடைத்து தப்பித்து வெளியே ஓட முயன்ற நைஜீரியா நாட்டை சேர்ந்த இக் ஒஜர் இபுகா பிரான்சிஸ்(30), ஒயிடிலே பீட்டர்(42), ஒலிடே யூசுப்(30), ஒக்புஜேம்ஸ்(27), ஏ.ஜெ.ஜான்(39), காலின் ஆண்டே, எப் பிங் எத்தின், காட்வின் சக்குவா, ஒசாலியாலோ சிலாகி ஜான், கானா மற்றும் சூடானை சேர்ந்த இருவர் என 11 பேர் மீது திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி அனைவரையும் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனையடுத்து அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்