காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 337 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது
திருச்சி,நவ.19 திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பதியப்பட்ட 204 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 337 கிலோ கஞ்சாவை நீதிமன்றம் ஆணையின்படி, திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”-யை (Drug Free Tamil Nadu) உருவாக்கும் சீரிய நோக்கில் தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை வகுத்து தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகரத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, போதை பொருளான கஞ்சாவை முழுமையாக கட்டுப்படுத்த திருச்சி மாநகர காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.
அதன்படி, திருச்சி மாநகரத்தில் உள்ள இ.புதூர், அமர்வு நீதிமன்றம், கோட்டை, காந்திமார்க்கெட், பாலக்கரை, தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை ஆகிய 8 காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW) ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 204 கஞ்சா வழக்குகளில், எதிரிகளிடமிருந்து சுமார் 336.596 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவுப்படியும், திருச்சி மாநகர ஆணையர் ந.காமினி, அறிவுறுத்தலின்படி, 204 கஞ்சா வழக்கின் எதிரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை இன்று 19.11.2025-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள மருத்துவக் கழிவுகளைப் பாதுகாக்கும் மற்றும் அகற்றும் தனியார் நிறுவனத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்(வடக்கு) மற்றும் உயர்மட்ட போதை பொருள் ஒழிப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (PCB) வகுத்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கப்பட்டது.