மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
திருச்சி, பிப்.14 திருச்சி மாவட்டம், மணப்பாறை, பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முகமது தீன் (வயது 53). சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வந்த இவரது மனைவி நஜிமாபேகம் என்பவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சவுதிஅரேபியாவிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை முகமதுதீன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் மற்றும் நகைப்பெட்டிகள் வெளியே சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 20 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பததை வெளிநாட்டில் உள்ள முகமதுதீனிடம் பேசி போலீசார் உறுதிசெய்தனர். இதனையடுத்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீட்டில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.