பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது: அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
திருச்சி, மார்ச் 6 முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு, முதலமைச்சர் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சாதனை விளக்கம் ஆகிய முப்பெரும் நிகழ்வு திருவெறும்பூர் தெற்கு மாவட்டம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நேற்று நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றியக்குழு துணை தலைவருமான நவல்பட்டு சண்முகம், பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கழகத் துணை பொதுச் செயலாளரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான அய்.பெரியசாமி, திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் பாசிச பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2014 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது நரேந்திர மோடி என்னை வெற்றி பெற வையுங்கள் பெட்ரோல் விலை டீசல் விலை சிலிண்டர் விலைகளை நான் குறைப்பேன் என்று கூறினார். 2014 ஆம் ஆண்டில் ரூ.45, 50க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103, டீசல் விலை 95க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்று ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.800 அதிகரித்துள்ளது. இதுதான் பா.ஜ.க. அரசின் 10 ஆண்டு ஆட்சியின் சாதனையாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்முறைப்படுத்தி வருகிறார். அதில் முதன்மையான திட்டமானது அனைத்து மகளிருக்கும் இலவச பேருந்து பயணம். இதன் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள் மாததம் ஒன்றிற்கு ரூ.888 சேமிப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மகளிருக்கான உரிமை தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 பெண்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். மேலும் பெண் குழந்தைகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் அவர்கள் கல்லூரிகளுக்கு செல்வதற்கு சிரமப்பட்டு வருவதை அறிந்த முதல்வர் அவர்கள் கல்லூரி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி அறிவித்ததுடன் மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் பிள்ளை மட்டும் இருக்கிறது என்று உணர்ந்த பெற்றோர்கள் இது குறித்து முதல்வரிடம் முறையிட்ட பொழுது அவர்களுக்கும் தமிழ் புதல்வன் என்னும் திட்டத்தில் ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதுபோல் முத்தான திட்டங்களை வழங்கி வருவதில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக திகழ்ந்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் தமிழ்நாட்டிற்கு தற்போது அடிக்கடி வந்து செல்கிறார். எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியை கூட வெற்றி பெற முடியாது. பாசிச பா.ஜ.க. ஆட்சியை அகற்றி பொதுமக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறினார். விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் அய்.பெரியசாமி பேசுகையில், தமிழ்நாட்டு மக்களுக்கான பல்வேறு சாதனைகளை செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். எனவே அவரது நூற்றாண்டு விழா என்பது தி.மு.க.வினர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடும் விழாவாகும். பாசிச மக்கள் விரோத பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த போது ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை அளிக்கப்படும் அறிவித்த மோடியின் கிராயாண்டி என்னவாயிற்று? 5 ஆண்டுகள் ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு சுயநலத்திற்காக தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டது. அதனால்தான் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இதனால் தமிழர்களுக்கு வேலை இல்லாத நிலையை பா.ஜ.க.வும், அதிமுகவும் ஏற்படுத்தின.
தற்போது தேர்தல் வந்துவிட்டதால் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி திமுகவை ஒழிப்போம் என்று கூறுகிறார். கடந்த 2017 இல் புழக்கத்தில் இருந்த ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு, கருப்பு பணத்தை ஒழிப்பேன், வெளிநாட்டிலுள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று கூறி மக்களை ஏமாற்றினீர்கள். அதானிக்கும், அம்பானிக்கும் நாட்டின் வளங்களை முதலீடுகளை தாரை வார்த்துள்ளீர்கள். பெரும் பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்டு தேர்தல் பத்திரத்தின் மூலம் ரூ.6,600 கோடி பா.ஜ.க. அரசு வாங்கியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் இனி தேர்தல்கள் நடைபெறாமல் சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு முயற்சிக்கும் பா.ஜ.க. ஆட்சியை ஒழிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்திட வேண்டும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், சபியுல்லா மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ், மாநில அணி நிர்வாகி மாமன்ற உறுப்பினர் செந்தில், துணை மேயர் திவ்யா, திருவெறும்பூர் ஒன்றிய குழுத் தலைவர் சத்யா கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு. மாவட்டக் கழக பொருளாளர் குணசேகரன், பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் தர்மராஜ், விஜயகுமார், சிவக்குமார், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.எம். கருணாநிதி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்