சாலை விபத்தில் கணவர் உயிரிழப்பு: மனைவி படுகாயம்
திருச்சி, மே 11 திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே அகிலாண்டபுரம் பேருந்து நிறுத்த பகுதியில் முன்னாள் சென்ற மோட்டார் பைக் மீது பின்னால் வந்த மோட்டார் பைக் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார். முதியவரின் மனைவி படுகாயம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கிருஷ்ணா கார்டனைச் சேர்ந்தவர் சேகர் (65) .இவருடைய மனைவி லதா (63) .கடந்த 9 ந்தேதி மாலை இவர்கள் இருவரும் மோட்டார் பைக்கில் திருச்சி லால்குடி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் லால்குடி அருகே திருமணமேடு ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25)பின்னால் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அகிலாண்டபுரம் பேருந்து நிறுத்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் பைக் மீது பின்னால் வந்த மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுமாறி கீழே விழுந்த கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த கணவன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அன்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மனைவி தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் .
இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.