நவ.16இல் சென்னையில் பேரணி : எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் பேட்டி
திருச்சி, செப். 11 திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் இன்று (செப்.11) நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடப்பு அரசியல் சூழல்கள், கட்சியின் உட்கட்சி தேர்தல் நிலவரங்கள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது;
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்:
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் முன்மொழியப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை நசுக்கும் தீய நோக்கத்துடனுடம், வக்ஃப் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் எண்ணத்துடனும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளது.
வக்ஃப் சொத்துக்கள் பொதுச் சொத்துகள் அல்ல; அவை மசூதிகள், மதரஸாக்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு மத நோக்கங்களுக்காக அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்கள். வக்ஃப் வாரியம் மற்றும் வக்ஃப் சொத்துக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வக்ஃப் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மேலும், இந்த சட்டத்தை திருத்துவதற்கான தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது.
இயற்கையாகவே, வக்பு சொத்துக்களின் பாதுகாவலர்களாகவும், அதனை நிர்வகிக்கும் உரிமை உள்ளவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள். ஆனால், சர்ச்சைக்குரிய திருத்த மசோதா முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் வாரியங்களில் சேர்க்க முன்மொழிகிறது. முன்மொழியப்பட்ட திருத்த மசோதாவில் இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் மிக மோசமானவை. பாஜக அரசின் இந்த பிற்போக்கு நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிப்பதோடு முன்மொழியப்பட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறது.
மேலும், அரசியலமைப்பிற்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கையில் இருந்து அரசு பின்வாங்கி, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரசியலமைப்பு உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
பரந்தூர் விமானநிலைய திட்டம்: ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது:
விளைநிலங்கள், குடியிருப்புகளை அழித்து திட்டமிடப்பட்டுள்ள பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை வழங்கியுள்ள ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் அருகே 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏகனாபுரத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 700 நாட்களைக் கடந்தும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.
விவசாய நிலங்களை, குடியிருப்புகளை, நீர்நிலைகளை பாதுகாக்க, விமான நிலைய திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வேண்டும் என்று கோரி, ஜனநாயக வழியில் தங்கள் உரிமைக்காக போராடும் மக்கள் மீது தொடர் அடக்குமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன.
மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்காமல் நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதியன்று ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு நிலங்களைக் கையகப்படுத்தும் அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விளைநிலங்களை அழித்து, சொந்த மாநில மக்களை அவர்களது சொந்த ஊரிலிருந்து விரட்டியடித்து அவர்களைச் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்க எத்தனித்துவிட்ட திமுக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. திராவிட மாடல் என்பது கார்ப்பரேட் மாடலே என்பதை கடந்த 3 ஆண்டுகால ஆட்சி மூலம் நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
எட்டு வழிச் சாலை எதிர்ப்பு போராட்டம் போன்ற கார்ப்பரேட் நலன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தங்களுக்கு வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொண்ட திமுக, அதே கார்ப்பரேட் வழியில் இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விளைநிலங்களை விவசாயிகளின் ஒப்புதல் இன்றி கைப்பற்றி எந்த திட்டங்களுக்கும் பயன்படுத்த மாட்டோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்த பிறகு அந்த வாக்குறுதியை தூக்கி எறிந்துள்ளது திமுக அரசு.
கார்ப்பரேட் நலன்புரி அரசாக மட்டுமே செயல்படும் ஒன்றிய அரசுக்கு சற்றும் குறைந்தவர்கள் நாங்களில்லை என்பதை சமூகநீதி மாடல், திராவிட மாடல் என சொல்லிக்கொள்ளும் திமுக அரசு நிரூபித்து வருகின்றது.
ஆகவே, வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக செயல்படுத்தப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மாநில அரசு கைவிட்டு, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை தடுத்து நிறுத்த வேண்டும்:
தமிழ்நாட்டில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து அவர்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய லஞ்சம் பெறப்படும் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. சமீபத்தில் கடலூர் திருமுட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த நெல்லை நெல் கொள்முதல் நிலையம் சென்று விற்பனை செய்ய சென்றுள்ளார். அவரிடம் அங்குள்ள ஊழியர்கள் சுமார் 50 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டுள்ளனர். 30 ஆயிரம் ரூபாய் வரை அவர் கொடுத்த நிலையில் பாதியளவு நெல்லை மட்டும் கொள்முதல் செய்துவிட்டு, மற்றவற்றை அப்படியே விட்டுவிட்டதால், கொள்முதல் நிலையத்திற்கு வெளியே நெல் அழிந்து வீணாவதைக் காண முடியாமல் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த செய்தி செய்தி ஊடகங்களில் வெளியாகின.
இப்படி தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்காமலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க போதுமான குடோன்கள் இல்லாததாலும், விற்பனைக்காக விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் இல்லாததாலும் பல்லாயிரக்கணக்கான மூட்டைகள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன. மட்டுமின்றி விவசாயிகள் நாள் கணக்கில் காக்க வைக்கப்படுகிறார்கள்.
ஆகவே, போதுமான நிரந்தர கொள்முதல் நிலையங்களையும், குடோன்களையும் அமைக்கும் செயல்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுப்பதோடு, நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கெதிராக தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்:
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மையினர் வெறுப்பு பிரச்சாரங்கள் பாஜக உள்ளிட்ட வகுப்புவாத கட்சிகளின் வழக்கமான அரசியலாக மாறியுள்ளது. சிறுபான்மை சமூகங்கள் நாட்டில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர். கும்பல் கொலைகள், வீடுகள், மஸ்ஜித்கள் உள்ளிட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் புல்டோசர் செய்யப்பட்டு தகர்க்கப்படுகின்றன. மட்டுமின்றி, மாட்டிறைச்சியின் பெயராலும் முஸ்லிம்கள் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
ஆகவே, நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள், கண்ணியம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோருகிறது. தமிழகத்திலும் இச்சட்டத்தை இயற்றி சிறுபான்மை பாதுகாப்பில் தமிழகம் முன்மாதிரியாக திகழ வேண்டும் எனவும் தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.
பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சறுக்கல் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது தமிழக அரசுப் பள்ளிகளில் மத அடிப்படையிலான, சமூகநீதி கருத்துக்களுக்கு எதிரான மற்றும் பிற்போக்கான கருத்துக்களை திணிக்கும் வகையிலான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. யோகா பயிற்சி, தியானப் பயிற்சி, உடற்கல்வி பயிற்சி, நல்லொழுக்கப் பயிற்சி என பல வழிகளில் அரசு பள்ளிக்குள் பல மதவாத சிந்தனை குழுக்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதுதொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருந்த நிலையில், சென்னை அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வு மூலம் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தங்களை திராவிட மாடல் என்றும், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் என்றும், சமூக நீதியின் காவலர்கள் என்றும் பேசிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் ஆட்சியில் தான் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தொடர்ச்சியாக அவலங்கள் நடந்து வருகின்றன.
புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை செயல்படுத்துவதாகட்டும், ஒன்றிய அரசின் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை செயல்படுத்துவதாகட்டும், கல்வி தொலைக்காட்சிக்கு ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட ஒருவரை சி.இ.ஓ வாக நியமிக்கும் நடவடிக்கையாக இருக்கட்டும், விநாயகர் சதுர்த்தி எப்படி கொண்டாட வேண்டும் என்கிற சுற்றறிக்கையாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான செயல்பாடுகளே அதிகம் நடைபெறும் துறையாக பள்ளிக் கல்வித்துறை மாறியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள இத்தகைய பயங்கரமான சறுக்கல்கள் அரசின் தோல்வியை காட்டுகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் பள்ளிக்கல்வித்துறை உள்ளதா என்கிற சந்தேகம் எழுகிறது. அமைச்சர் இந்த விசயத்துக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் சர்ச்சைகள் குறித்தும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற கல்விக்கு சம்மந்தம் இல்லாத நிகழ்வுகள் பள்ளிகளில் நடைபெறுவதை உறுதியாக தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் பேச்சளவுக்கு சமூகநீதி மண், திராவிட மண் என பேசிக்கொண்டிருக்காமல், அதன் கொள்கைகளை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நவம்பர் 16ல் தலைநகரில் பேரணி முஸ்லிம்களுக்கு சமூக-பொருளாதார வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பையும், சம பங்கீட்டையும் மேம்படுத்தும் வகையில், முறையான இடஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, சிறுபான்மை முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தித்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தியும், தமிழக சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளை வாக்குறுதிபடி விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசு, விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் 16 அன்று தலைநகர் சென்னையில் லட்சக்கணக்கானோர் அணிதிரளும் மாபெரும் பேரணியை நடத்த எஸ்டிபிஐ கட்சி திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.