சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயம்
திருச்சி, ஜீலை 21 மணப்பாறை அருகே சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயம் ஒரே இடத்தில் தொடரும் விபத்தை கண்டித்து மக்கள் மறியல்.
பொள்ளாச்சியில் இருந்து வீரப்பூர் கோவிலில் சாமிகும்பிட்டு விட்டு சுமார் 20 க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேன் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் தடுப்பில் மோதி எதிர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மணப்பாறை – துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையில் விபத்து நடந்த புத்துக்குளம் பிரிவு சாலையில் மிகவும் ஆபத்தான வளைவு இருப்பதாகவும் சாலை அமைத்த ஒரு வருடங்களில் அதே இடத்தில் மட்டுமே 50 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் விபத்துக்கள் தொடர்வதாக கூறி அந்த பகுதி மக்கள் 4 வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மறியல் போராட்டம் நீடித்த நிலையில் புத்தானத்தம் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி முதலில் விபத்து நடைபெறும் பகுதியில் தடுப்பு வைப்பதாகவும், பின்னர் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ – மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகினர்.