பட்டா பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
திருச்சி அக்.13 லால்குடியில் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா பெருவளப்பூர் சாமிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராகாந்தி. அதே பகுதியில் கட்டிடத்துடன் கூடிய வீட்டு மனைக்கு பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த மனு குறித்து பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலர் மோகன பூபதி கடந்த 8ம் தேதி விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வீட்டுமனை நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய இந்திரா காந்தியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத இந்திரா காந்தி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை இந்திரா காந்தியிடம் கொடுத்து அனுப்பினர்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட இந்திரா காந்தி இன்று மதியம் பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, கிராம நிர்வாக அலுவலர் மோகன பூபதியிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் , காவல் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் மோகன பூபதியை பிடித்து கைது செய்தனர்.
பெருவளப்பூரில் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான மோகன பூபதி சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதி ஆகும்.