முசிறி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேர் கைது
திருச்சி, பிப்.11 முசிறி அருகே தொட்டியம், காட்டுப்புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேர் கைது – லோடு ஆட்டோ உள்பட 4 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே சின்னபள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (39). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை காட்டுப்புத்தூர் பகுதியில் நிறுத்திவிட்டு வாரச்சந்தைக்கு சென்று, பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, காட்டுப்புத்தூர் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சீலைப்பிள்ளையார்புதூர் பிரிவு சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
விசாரணையில், அவர்கள் கரூர் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (32) மற்றும் அரசகவுண்டனூரை சேர்ந்த அஜித்குமார் (26) என்பது தெரிந்தது. இவர்கள் வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துகொண்டே மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தொட்டியம் தாலுகா, மேலக்கார்த்திகைப்பட்டியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் தனது மொபட்டை நிறுத்திவிட்டு குளிக்க சென்று பின்னர் வந்து பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, போலீசாரை கண்டதும் மொபட்டில் தப்ப முயன்ற வாலிபரைப் பிடித்து விசாரணை செய்ததில் தொட்டியம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த விஜய் (27) என்பதும், கோவில் முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருடியதும் தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து மொபட் வண்டியை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.