புனித வெள்ளி- கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
திருச்சி ஏப் 3 – புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஏராளமானவர்கள் பங்கேற்பு
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை, ஜெபம், மன்றாட்டு, குருத்தோலை ஞாயிறு மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன.
நேற்று பெரிய வியாழனை முன்னிட்டு திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்று புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அவரது சிலுவை மரணத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், புனித செபஸ்தியார் ஆலயம், பாலக்கரை சகாய மாதா பசிலிக்கா, மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயம், புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயம், பொன்மலை சூசையப்பர் ஆலயம்,காஜா பேட்டை ஆலம் தெரு புனித செல்வநாயகி அம்மாள் ஆலயம் உட்பட திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தனர்.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வெயில் அதிகமாக இருப்பதால் பக்தர்களின் நலன் கருதி ஆலயங்களில் நீர்மோர், பானகம் ஆகியவை வழங்கப்பட்டது. இன்று மாலை திருப்பலியும், சிலுவைப் பாதையும், நிறைவேற்றப்படுகிறது.
நாளை 4ந்தேதி சனிக்கிழமை இரவு திருப்பலியும், நாளை மறுநாள்
5 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.