திருச்சி விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி, பிப். 6 தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
முன்னதாக துணை முதலமைச்சருடன், அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, கோவி.செழியன், கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஆகியோரும் அதே விமானத்தில் வருகை தந்து, திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த திமுக வரவேற்பு குழுவினருடன் கலந்து கொண்டனர். திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திமுக மாவட்ட செயலர்கள் . வைரமணி, ந. தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்ட பலரும் துணை முதல்வரை வரவேற்றனர்.
அரசு நிர்வாகத்தின் சார்பில், ஆட்சியரைத் தொடர்ந்து, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் ந.காமினி, மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உள்ளிட்டோரும் துணை முதலமைச்சருக்கு புத்தகங்கள் மற்றும் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து காரில் சாலை வழியாக, தஞ்சாவூரில் நடைபெறும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அவர் புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்வை முடித்துக் கொண்டு தஞ்சாவூரில் தங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
திருச்சியில் இன்று விழா: தஞ்சாவூர் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு திருச்சிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசுகிறார்.இந்த நிகழ்வில், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.