தி.மு.க. அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் : அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்
திருச்சி,ஏப்.2 திருச்சிக்கு ரூபாய் 26,000 கோடி நிதி ஒதுக்கீடு – சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்க அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்…
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்
நடைபெற்றது.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சரும், மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக மற்றும் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வரும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்..
கடந்த 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் என் மீது போடப்பட்ட போராட்ட வழக்குகளைத் தவிர்த்து, ஜெயலலிதா அவர்களால் போடப்பட்ட 13 வழக்குகளையும் சட்டப்படி சந்தித்து நிரபராதியாக விடுவிக்கப்பட்டேன். தற்போது நீதிமன்றத்தில் உள்ள புதிய வழக்குகள் குறித்து நான் பேச விரும்பவில்லை. நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்போம். நான் எதற்கும் அஞ்சவில்லை, தவறாக நடக்கவில்லை என்பதை மட்டும் உறுதிபடக் கூறுகிறேன்.
திருச்சி எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்புமுனை மையமாகத் திகழ்கிறது. இன்று பல வசதி படைத்தவர்களும், புதிய கட்சிகளும் திருச்சியில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள். இதிலிருந்தே திருச்சியின் அரசியல் முக்கியத்துவத்தை உணரலாம். திருச்சியை மற்ற நகரங்களை விடச் சிறந்த நகரமாக மாற்ற முதல்வர் பாடுபட்டு வருகிறார்.
கடந்த ஐந்து வருடத்தில் திருச்சி மாவட்டத்திற்காக மட்டும் முதலமைச்சர் 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இதில் 150 கோடியில் காவிரி பாலம், 150 கோடியில் நவீன மருத்துவமனை, 350 கோடியில் நூலகம், 350 கோடியில் ஐடி பார்க் மற்றும் 500 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்றவை அடங்கும். கடந்த ஆண்டில் மட்டும் 4,500 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 15,000 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனக்கு வாய்ப்பளித்த முதலமைச்சரின் கட்டளையை நிறைவேற்ற உழைப்பதே எனது இலக்கு.
எனவே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.
இஸ்லாமிய இயக்கங்களும், சிறுபான்மையினரும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி திமுகவின் பின்னால் நிற்கிறார்கள். ஒன்பது தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற கூட்டணி கட்சியினர் வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையையும் விளக்கிச் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.