மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொதுக்குழு கூட்டம்
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொதுக்குழு கூட்டம் நேற்று மாநில தலைவர் டாக்டர் ராஜலிங்கம் தலைமையில் மதுரையில் நடந்தது. மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணை தலைவர் முனைவர் பெரியசாமி, துணை செயலாளர்கள் கரூர் சுகுமார், திருச்சி ஆர். இளங்கோ, மதுரை மாவட்ட செயலாளர் பெ. சேகர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மாநில துணைத்தலைவர் மதுரை அசோகன் வரவேற்றார்.
மக்கள் சக்தி இயக்க மாநில பொதுசெயலாளர் முனைவர் எல்.பாஸ்கரன் எழுச்சியுரையுடன், இயக்கத்தின் தீர்மானங்கள் வாசித்தார்.
திருவள்ளுவர் விருது மதுரை கார்த்திகேயன் மணிமொழி, பேராசிரியர் சண்முகம் விருது மதுரை மாவட்ட செயலாளர் பெ.சேகர், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி விருது கரூர் சுகுமார் ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டு மாநில மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள்
தீர்மானங்கள்
1.தமிழ்நாட்டில் படிப்படியாக பூரண மதுவிலக்கு என்ற இலக்கை எட்டவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் என இயக்கம் வலியுறுத்துகிறது.
2.சென்னை கிளாம்பாக்கம், திருச்சி பஞ்சப்பூரில் உலகத் தரத்தில் நவீன பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை இயக்கம் பாராட்டுகிறது. அதேபோல் மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தையும் நவீனமயமாக்க வேண்டும் என அரசை இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
3.தமிழ்நாட்டில் நீர்வளத்தைப் பெருக்குவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் பாசனக் கால்வாய், உபரிநீர் கால்வாய், புதிய தடுப்பணைகள், உருவாக்குதல் போன்ற திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி நீர் மேலாண்மையைப் மேம்படுத்த வேண்டும் என இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
4.அரசியல் மற்றும் மத நிகழ்வுகளில் குறிப்பாக கோவில் கொடை விழாக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக முதன்மைச் சாலைகளில் அலங்கார வளைவுகளும், பதாகைகளும் வைப்பதை அரசு முற்றிலும் தடை செய்ய வேண்டும் என இயக்கம் வலியுறுத்துகிறது.
5.மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் வகையில், பொது இடங்களிலும், சாலைகளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதியளிக்கக் கூடாது எனவும், கூட்டங்களுக்கான ஒழுங்குமுறை வரையறையை நீதிமன்றம் வகுக்க வேண்டும் எனவும் மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்துகிறது.
6.தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மருத்துவ அறிவியல் முறைப்படி அரசு நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
7.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
8.டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க நிரந்தர கட்டடங்கள் அமைக்க வேண்டும்.
9.அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கு உடனடியாக நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என இயக்கம் வலியுறுத்துகிறது.
10. மக்கள் சக்தி இயக்கம் வருகிற 2026ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்தது,அதற்கான விழிப்புணர்வு நிகழ்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தஞ்சை முனைவர் முருகானந்தம்,தூத்துக்குடி கந்தசாமி, பெரம்பலூர் சிவக்குமார், சிவகங்கை முனைவர் புகழேந்தி, கரூர் முருகேசன், புதுக்கோட்டை, சென்னை, மற்றும் பலர் மாவட்டத்தில் இயக்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள். முடிவில் மதுரை ஜெய் ஹிந்த் சாமிநாதன் நன்றி கூறினார்.