உடல் தானம் செய்த நல்லாசிரியர் குடும்பத்துக்கு மக்கள் சக்தி இயக்கம் மரியாதை
உடல் தானம் செய்த நல்லாசிரியருக்கு மக்கள் சக்தி இயக்கம் மரியாதை
கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா, பொகளூர் சரவணா நகர், கதவு எண் 7/152 இல் வசித்து வந்த தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான திரு. சுப்பண்ணன் (93) அவர்கள் இயற்கை எய்தினார்.
மரணத்திற்கு பிந்தும் சமூகத்திற்கு பயன் அளிக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்தின்படி, அவரது உடலை கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கும் விருப்பத்தை குடும்பத்தினரிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தார். அவரின் விருப்பத்தை மதித்து, அவரது மகன் செந்தாமரை கண்ணன் தந்தையின் உடலை கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொடையாக வழங்கி உயர்ந்த மனிதநேயச் செயலாற்றினார்.
இந்த ஈடு கட்ட முடியாத தியாகச் செயலை,
சமூக நலனுக்காக உடல் தானம் செய்து முன்மாதிரியாக திகழ்ந்த மறைந்த நல்லாசிரியர் திரு. சுப்பண்ணன் அவர்களுக்கும், அவரின் விருப்பத்தை நிறைவேற்றிய அவரது மகன் திரு. செந்தாமரை கண்ணன் அவர்களுக்கும் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாநில துணைச்செயலாளர் வெ.இரா.சந்திரசேகர், போத்தனூர் இரயில் ரெங்கநாதன், சென்னை வெங்கடேஷன், அன்னூர் சூழற்சங்கஉறுப்பினர் திரு.வரதராச ஆதித்யன் ஆகியோர் அவரது இல்லம் சென்று நன்றி தெரிவித்து பாராட்டு சான்றிதழ், திருக்குறள் மற்றும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி புத்தகம் வழங்கி மரியாதையும் தெரிவிக்கப்பட்டது.
உடல் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்கவதை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தகைய உயர்ந்த செயல்கள் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக அமையும் என மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் தெரிவித்தார்.