கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி, நவ.20 தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் யுஏடிடி 2.0, உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கத்தின் தலைவர் தனசேகர், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கோட்டத்தில் உள்ள 14 வட்டங்களில் இருந்தும் தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், உழவர் பெருமக்களின் அதிக வருமானத்தை ஈட்டி தரக்கூடிய தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய யு.ஏ.டி.டி. 2. ஓ.திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும், தோட்டக்கலை பட்டயம் மற்றும் பட்டயதாரர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய யு.ஏ.டி.டி. 2. ஓ திட்டத்தை கைவிட வேண்டும், தோட்டக்கலைத் துறை கள அலுவலர்களை அவசர காலத்தில் பணியிடப் பெயர்ச்சி செய்வதை உடனடியாக நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.