திருவெறும்பூர் அருகே 17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
திருச்சி, டிச.23 திருவெறும்பூர் டாஸ்மார்க் கடை அருகே 17 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும்.இது திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் ஏஎஸ்பிஅலுவலகத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த பகுதியில் பேரூராட்சிகட்டுப்பாட்டில் சுமார் 50 கடைகள் உள்ளது. இதில் அரசு மதுபான கடை மற்றும் அதை சார்ந்த மதுபான பாரும் அடங்கும். இந்த நிலையில் மதுபான பார் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் இரு சக்கரம், கார், லாரி உள்ளிட்ட மெக்கானிக் கடைகள், லேத் பட்டறைகள், அரிசி கடை பெட்டிக்கடை, வாகனங்களுக்கு சீட் கவர் தைக்கும் கடை என பல்வேறு கடைகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 17 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கடைகளுக்குள் புகுந்து உள்ளே இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்று உள்ளனர்.
இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளையடிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்டதோடு கடை உரிமையாளர்களிடம் புகார் பெற்று வருகின்றனர்.
ஒரே நேரத்தில் அதுவும் திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் ஏ எஸ் பி அலுவலகம் அருகே திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
திருவெறும்பூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இடையேபீதியையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுவதாக
இந்த பாரதி புரத்தில் 24 மணி நேரமும் காவல்துறைக்கு தெரிந்தே அரசு மதுபான பார் செயல்படுவதாகவும் இதனால் குடிமகன்கள் எப்பொழுதும் 24 மணி நேரமும் இங்கு சுற்றி திரிவதாகவும் அப்படி சுற்றி திரியும் பலர் தங்களிடம் காசு இல்லை என்றால் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் இதற்கு முழு காரணம் அரசு மதுபான கடை பார் மற்றும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்ததே காரணம் எனவும் இதுபோன்று ஒரே நேரத்தில் 17 கடைகள் பூட்டு உடைக்கப்பட்டு கடைகளில் இருந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குற்றவாளிகளை கண்டுபிடித்து களவு போன பொருட்களை மீட்டு தருவதுடன் இந்த குற்ற செயல்களுக்கு காரணமாக இருந்த அரசு மதுபான பாரை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.