திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் கண்டெய்னர் லாரியில் விலையுயர்ந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை ஏற்றி ஓட்டி வந்த டிரைவரே தனது நண்பர்களுடன் சேர்ந்து 3 புல்லட் பைக்குகளை திருடிச் சென்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பதுக்கபத்து அழகம்மன் புரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் 42 வயதான சுதாகர்.இவர் கடந்த 11 ம் தேதி இரவு சென்னையிலிருந்து கண்டெய்னர் லாரியில் விலையுயர்ந்த 40 ராயல் என்ஃபீல்டு புல்லட்ட மோட்டார் பைக்கை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் உள்ள குடோனுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது தனது நண்பர்களான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி கோயில் தெருவைச் சேர்ந்த பாலன் மகன் 25 வயதான அருண் மற்றும் திருச்செந்தூர் அருணாச்சலபுரம் தெற்கு தெருவை சேர்ந்த கலியன் மகன் 23 சிவசந்திரன் ஆகியோரை 12 ந்தேதி திருச்சி சிறுகனூர் பகுதிக்கு வரவழைத்துள்ளார். இந்நிலையில் சிறுகனூரில் உள்ள தனியார் மண்ணபம் அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்திய டிரைவர் சுதாகர் மற்றும் நணபர்கள் மூன்று பேரும் சேர்ந்து மூன்று புல்லட் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தூத்துக்குடி நோக்கி கிளம்பிச் சென்றனர். சென்னையிலிருந்து அனுப்பிவிட்ட கண்டெய்னர் லாரி தஞ்சாவூருக்கு வந்து சேராததால் தஞ்சாவூர் மேலாளர் சென்னைக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சென்னை மேலாளர் ஜிபிஎஸ் ட்ராக் மூலம் லாரியை ட்ராக் செய்த போது சிறுகனூர் பகுதியில் நீண்ட நேரமாக லாரி நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து கம்பெனி மேலாளர் 13 ந்தேதி எதிரே வந்த மற்றொரு கண்டெய்னர் லாரியின் டிரைவரிடம் தகவலை கூறி அனுப்பி பார்த்த போது கண்டெய்னர் லாரி திறந்து கிடந்ததும் அதிலிருந்து மூன்று புல்லட் பைக்குகள் காணாமல் போனதும் தெரியவந்தது.
இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த 3 பேரையும் பிடித்து திருடிச் சென்ற 3 புல்லட் மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்து சிறுகனூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.