மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி நிகழ்ச்சி

0 262
Stalin trichy visit

மணப்பாறையில் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி நிகழ்ச்சி.
பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் குதிரை வாகனத்தில் ஒழுந்தருளி திருவீதி உலா செல்லும் வேடபரி திருவிழா இன்று மாலை நடைபெற்றது. காரமேட்டுப்பட்டி, மணப்பாறைபட்டி, எடத்தெரு ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் முனியப்பன் கோவிலில் இருந்து பல்வேறு வண்ணக்கொடிகளுடன் படுகளம் ஓடிவந்து மாரியம்மன் கோவிலை அடைந்தவுடன் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மின்னொளியில் ஜொலித்த குதிரை வாகனத்தில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் வேடபரி நிகழ்ச்சி தொடங்கியது. இளைஞர்கள் குதிரை வாகனத்தை தோளில் சுமந்து கோவிலில் இருந்து புறப்பட்டு ராஜவீதிகளின் வழியாக அம்மன் திருவீதி உலா சென்று இறுதியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து வந்தனர். தப்பாட்டம் முழங்க அதற்கேற்றவாறு இளைஞர்கள் நடனமாட ஆட்டம், பாட்டம், கொண்டாடத்துடன் அனைவரும் முளைப்பாரி எடுத்து வந்தனர். விழாக்கோலம் பூண்டிருந்த நிகழ்வுகளில் எங்கு திரும்பினும் மக்கள் தலைகளாகத் தான் காட்சி அளித்தது. திருவிழாவில் பல்லாரயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மன் குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டவுடன் அம்மனை படம் பிடிக்கும் ஆசையில் நூற்றுக்கணக்கானோர் தங்களது மொபைல் போனில் அம்மனை படம் எடுத்ததால் மொபைல் போன்களில் இருந்து வந்த ஒளி வித்தியாசமாக காட்சியளித்தது. அதேபோல் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என பலரும் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் சுழற்றி வீரத்தை வெளிப்படுத்தினர்.
புதன் கிழமை நடைபெறும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.