வணிகர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வணிகர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் வணிகர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, வணிகர்களின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனைகள் வழங்கினர். இதில், சங்க வளர்ச்சி சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஆண்டறிக்கை வரவு செலவுகளை சரிபார்த்து ஒப்புதல்களை வழங்கினர். இந்த வணிகர்கள் நலச்சங்கத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் கடை உரிமையாளர் அனைவரும் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும். கடைவீதியில் வேகத்தடை அமைக்கவேண்டும், புதியதாக காய்கறி வளாகம் கட்டப்படும் நிலையில் அதிகளவு கழிவுநீர் வெளியேற கட்டமைப்பு அமைக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின்தடை சரிசெய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் ஊழியர்கள் குறைந்த அளவில் இருப்பதால், சரிசெய்ய ஊழியர்களை அதிகப்படுத்தவேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் சங்க செயலாளர் பிரசன்னா, பொருளாளர் வெங்கடேசன், ஆலோசகர்கள் மோகன்ராஜ், திருநாவுக்கரசு, துரைசக்திவேல் மற்றும் நிர்வாகிகள், மண்ணச்சநல்லூர் பகுதி வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர் .