ஆவாரங்காட்டில் நடைபெற்ற ஜல்லிக் கட்டு விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆவாரங்காடு என்ற இடத்தில் உள்ள பொன்னர் சங்கர் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில் முன்பு உள்ள திடலில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார்.
வாடிவாசலில் முதலில் கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 650 ஜல்லிக்கட்டு காளைகள் கோவில் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்டு சீறி வரும் காளைகளை அடக்க 300 மாடு பிடி வீரர்கள் களம் கண்டனர்.
கட்டில், கிரைண்டர், அண்டா, ரொக்கப்பணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. . சிறந்த காளைக்கு குளிர்சாதன பெட்டியும், சிறந்த மாடு பிடி வீரருக்கு எல்இடி டிவியும் வழங்கப்பட்டன. . அனைத்து மாடுகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.