திருச்சி மாநகரில் இன்று 126 இடங்களிலும், திருச்சி சுற்றியுள்ள ஊரகப் பகுதிகளில் 635 இடங்கள் என மொத்தமாக ஏழு 761 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தில்லைநகர் விஸ்வநாதன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு நேரில் சென்று பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்… திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களாக 22.80 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும். மாநகரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான 7.50 லட்சம் பேரில் 4.5 லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 3.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இன்று ஒரே நாளில் 120 இடங்களில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த கொரோனாவை முறியடிக்க முடியும். விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த மாபெரும் முகாமில் டாக்டர்கள் 20 பேர், நர்சுகள் 400 பேர் பணியில் உள்ளனர். ஊரகப் பகுதிகளில் 635 இடங்களில் 70,000 பேருக்கு இன்று தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது என்றார். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், முன்னாள் துணை மேயர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..