குடிநீர் வழங்காததை கண்டித்து துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
திருச்சி, பிப்.16 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பொன்னம்பலம்பட்டி கிராம மக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.
துறையூர் அருகே உள்ள ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்டது பொன்னம்பலம்பட்டி கிராமம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் இக்கிராமத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பொன்னம்பலம்பட்டி கிராமத்தின் குடிநீர் தேவைக்காக நான்கு இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளை மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதிக்கு குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாக தங்களுக்கு குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொன்னம்பலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னம்பலம்பட்டி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின்மோட்டார் சரி செய்யப்பட்டு நாளை அப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.