சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
திருச்சி, பிப்.16 விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை தர வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தர வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது காவல்துறையை வைத்து கண்ணீர் புகை கொண்டு மற்றும் தாக்குதல் நடத்தி விவசாயிகளை நசுக்கி ஒடுக்க நினைக்கின்ற பாஜக அரசை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக திருச்சி தலைமை தபால் நிலையம் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.