ஓடும் பேருந்தில் ஏற முயன்றவர் தடுமாறி விழுந்து உயிரிழப்பு
திருச்சி, பிப். 28 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் நேற்று மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் ஓடிச் சென்று ஏற முயன்றவர் தானாக தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
திருச்சி மணப்பாறை தாலுக்கா வேங்கைகுறிச்சி ஊராட்சி மாரச்சி ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் வீரமலை.இவரது மகன் முருகேசன். இவர் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஓடிச்சென்று பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதமாக தடுமாறி தானாக கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் முருகேசன் மீது ஏறியதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.