திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த 1.5 கிலோ தங்கம்
திருச்சி, மார்ச் 8 திருச்சி விமான நிலைய கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேப்பரால் சுற்றப்பட்ட பார்சல் அடங்கிய பிளாஸ்டிக் பையொன்று கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பார்சலை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை சோதனையிட்டதில் 1.56 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதில் இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர் அந்த பிளாஸ்டிக் பையை எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு 1 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.