ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
திருச்சி, மார்ச் 12 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண்மை உழவர் நல அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் சார்பில் கிசான் கோஸ்திஸ் என்னும் விவசாயிகள் குழு கூட்டம் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து பயிற்சி நேற்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் வேளாண்மை அலுவலர் சௌமியா தலைமை வகித்து கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டங்களைப் பற்றியும் மர பயிர்களின் முக்கியத்துவம் எடுத்துரைத்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் திவ்யா தோட்டக்கலை பயிர்களின் ஒருங்கிணைந்த பண்ணையம் எவ்வாறு மேற்கொள்வது குறித்தும் காளான் வளர்ப்பு ,தேனி வளர்ப்பு பற்றியும் கூறினார். விதைச்சான்று அலுவலர் ரமேஷ் அசோலாவின் பயன்பாடு மற்றும் மீன் குட்டை எவ்வாறு மேற்கொள்வது குறித்தும், துணை வேளாண்மை அலுவலர் சின்னப்பாண்டி மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் முன்னோடி விவசாயிகள் பற்றியும், கால்நடைத்துறை சரஸ்வதி ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடையின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். இப்பயிற்சியிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கௌசிகா மற்றும் ஸ்வேதா மேற்கொண்டனர்.