சீரான குடிநீர் விநியோகம் கோரி மணப்பாறை ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
திருச்சி, ஏப். 24 சீரான குடிநீர் விநியோகம் கோரி மணப்பாறை ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பெரிய அணைக்கரைப்பட்டி கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகிக்கக்கோரி பலமுறை புகார் அளித்தும் குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிது. ஏற்கெனவே அப்பகுதியிலுள்ள ஆழ்துளை கிணறுகளும் பழுதாகி இருக்கும் நிலையில், கடந்த சிலநாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெற வில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், ஊர் முக்கியஸ்தர் பெரியதனம் சேசுராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆர். ஆரோக்கியம், கே. முனியாண்டி ஆகியோர் தலைமையில் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானபிரகாசம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவள்ளி நாகராஜ் ஆகியோர் அளித்த உறுதியின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.