வீட்டிற்குள் புகுந்த பாம்பை மீட்ட தீயணைப்புத்துறையினர்
திருச்சி, ஜூலை 12 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்காலில் சமையல் அறைக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லால்குடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
லால்குடி அருகே மணக்கால், அன்பில் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது 5 அடி நீளமுள்ள நல்லப்பாம்பு அவர்களை கடந்து சமையல் அறைக்குள் புகுந்தது. இதைக் கண்ட மகேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் பயத்தில் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் இதுகுறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு மகேஸ்வரன் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து அலெக்ஸ், வீரர்கள் சசிகுமார், விஜய், பிரபு, மனோஜ்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் சமையல் அறைக்குள் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர் அங்குள்ள வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.