திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை கல்பாளையத்தான் பெட்டி கிராமத்தில் வசித்து வரும் பார்வை மாற்றுத்திறனாளி பெல்சியா சந்தன மேரி மற்றும் தந்தையை இழந்த அவரது தாயார் இருதயமேரி மற்றும் இவரது வயது முதிர்ந்த தாய் தந்தை ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது வீட்டின் அருகே வசித்து வரும் சிலர் இருதய மேரியின் வீட்டை கிரயம் செய்து தரக்கோரி பல்வேறு வழிகளில் தொந்தரவு செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருதய மேரி மற்றும் அவரது சகோதரர் பிச்சமுத்து ஆகியோரை அடித்தும், அவரது வீட்டை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து பலமுறை மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க கோரியும், மணப்பாறை காவல் நிலையத்தை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஸ்டார் பார்வையற்றோர் நல அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் தேசிய மேம்பாட்டு அமைப்பு மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. உலகின் ஒளி பார்வையற்றோர் நல அறக்கட்டளை நிர்வாகி மரியதாஸ் முன்னிலையில் வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு உயிர் பாதுகாப்பு வழங்க கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட பார்வையற்றோர் அமைப்புகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.