மின் மோட்டாரின் வயர்களை திருடியவர் கைது
திருச்சி, ஆக. 19 திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பழைய கோட்டை கிராமம் அணுக்காணத் தத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி( 55). இவர் நேற்று காலை அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு நபர் தோட்டத்தின் அருகில் உட்கார்ந்திருந்ததாகவும் இதனை அடுத்து அவர் மீண்டும் வீட்டுக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது மின் மோட்டார் பெட்டி திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அதனைத் தொடர்ந்து அப்போது ஒரு நபர் பிளாஸ்டிக் பைகளுடன் சந்தேகமாக நடந்து சென்றதாகவும் அந்த நபரை நிற்க சொல்லி சத்தம் போட்டும் நிற்காமல் ஓடியதால் அவனை இருசக்கர வாகனத்தில் துரத்தி பிடித்து விசாரித்த போது அவன் மணப்பாறை விளக்கலாம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்திரன் (29) என்பதும் இவன் குருமூர்த்தியின் தோட்டத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் மின் வயரை திருடி இருப்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து மின் வயர் திருடியவனை வையம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து வையம்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து அவன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .மேலும் இதுபோன்று தோட்டங்களில் உள்ள மின் வயர்களை மர்ம நபர்கள் சில மாதங்களாகவே மணப்பாறை, வையம்பட்டி ஆகிய பகுதிகளில் திருடி வருவது குறிப்பிடத்தக்கது.