மக்களுடன் முதல்வர் முகாமில் செல்போனில் மூழ்கிய அதிகாரிகள் : பொதுமக்கள் அதிருப்தி
திருச்சி, ஆக. 22 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பண்ணப்பட்டி, பொய்கைப்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமை மணப்பாறை ஒன்றியக்குழு தலைவர் அமிர்தவள்ளி விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் வருவாய்த்துறை, மின்வாரியத்துறை, வேளாண்துறை, காவல்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்துப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே டேபிள்கள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் பொதுமக்களின் மனுக்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்ககு டோக்கன் வழங்கப்பட்டு அதனை பதிவு செய்து முத்திரையிடப்பட்டு தீர்வு காண்பதற்காக அந்தந்த துறை அதிகாரிகளிடம் மனுதாரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பெரும்பாலான அதிகாரிகள் தங்களது மொபைல் போனில் நேரத்தை செலவிட்டனர். போனில் பேசிக்கொண்டும், வீடியோ பார்த்துக்கொண்டும் இருந்ததால் மனு கொடுக்க வந்த மக்கள் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியடைந்தனர். அரசு மக்களைத் தேடி அவர்கள் பகுதிக்கே சென்று மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் கொண்டு வந்துள்ள மக்களுடன் முதல்வர் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதிகாரிகள் செயல்பாடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இம்முகாமில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பண்ணப்பட்டி, பொய்கைப்பட்டி ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.