அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றம்
திருச்சி, டிச. 30 மணப்பாறை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி வடக்கு களம் அருகே அரசுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள தரிசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கொன்னை, உசிலை, வேளாமரம், கருவேல மரம் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பலவகை மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அங்கிருந்த மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு அகற்றி துண்டு துண்டுகளாக வெட்டி லாரியில் ஏற்றப்பட்டன.
மரங்களை சட்டவிரோதமாக அகற்றும் நபர்கள் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மரம் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்தினார். லாரியில் ஏற்றப்பட்ட மரங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் மரம் வெட்ட அனுமதி கொடுத்தது குறித்து விசாரணை நடத்தியதில் அப்பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர்தான் அருகே பட்டா நிலத்தில் உள்ள மரங்களோடு சேர்த்து புறம்போக்கில் உள்ள மரங்களையும் அகற்றக் கூறியுள்ளார் என தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மரங்கள் வேரோடு அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.