பாம்பு கடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருச்சி, ஜன.22 திருச்சி மாவட்டம், தா.பேட்டை அடுத்த மேலபுது மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லன் (56) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் இளைய மகள் சுமதி (19) முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ எக்னாமிக்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்( 20-ம் தேதி ) மாலை வீட்டின் அருகே உள்ள குளியலறைக்கு மாணவி சுமதி சென்ற போது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி சுமதி சத்தம் போட்டபடி வீட்டிற்குள் ஓடி வந்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுமதியை துறையூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி சுமதி பரிதாபமாக இறந்து போனார்.
சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி சுமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.