பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
திருச்சி மார்ச் 21 திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள கைலாசபுரம் பகுதியில் பொதுத்துறைக்குச் சொந்தமான பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. பெல் நிறுவனத்தின் ஊரக வளாகத்தில் மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் அறிவித்ததை தொடர்ந்து, வட்டாட்சியர் தலைமையில் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. அப்பேச்சுவார்த்தையில், மாடுகளை தற்காலிகமாக அடைத்து வைக்க திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்திடம் இடம் கேட்டு, எல்.பி.எப்; ஏ.டி.பி., ஐ.என்.டி.யு.சி. ; பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.
பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக வேலை பார்த்து வரும் தமிழ்ச்செல்வன் (வயது 40) என்பவர், தனது மகனை பெல் நிறுவன வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு, அதே வளாகத்தில், மற்றொரு பள்ளியில் படித்து வரும் ஒரு மகனை அழைப்பதற்காக கடந்த 19.03.2025 மாலை 4மணிக்கு சென்றுள்ளார்.
பள்ளியின் வாசல் பகுதியில் அவர் நின்று கொண்டிருந்தபோது, ஒரு சில மாடுகள் சண்டை போட்டுக்கொண்டு, ஓடிவந்து தமிழ்ச்செல்வனையும், அவரது மகனையும் முட்டி கீழே தள்ளியது.
இந்த மோதலில் தமிழ்ச்செல்வனின் கழுத்துக்கு அருகே எழும்பு முறிந்தது. அவர் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதுவரை சுயநினைவு திரும்பவில்லை.
இந்நிலையில் எல்.பி.எப்; ஏ.டி.பி., ஐ.என்.டி.யு.சி. ; பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெல் நிறுவன வளாகத்திற்குள் சுற்றித் திரியும் மாடுகளையும் நாய்களையும் உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். அந்த விலங்குகளால் பாதிப்புக்கு உள்ளான நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். தொடரும் அசம்பாவிதங்களை தடுக்க தவறியதாக கூறி திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினார்கள்.