மதுரை காளியம்மன் கோயிலில் தேர் திருவிழா – வானில் வர்ணஜாலம் காட்டி வாணவேடிக்கை
திருச்சி, ஏப். 8 தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் தேர் திருவிழா – வானில் வர்ணஜாலம் காட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி.
திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு 30 மற்றும் 31 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான இரண்டு தேர்களை பக்தர்கள் தோளிலும் தலையிலும் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வருவர்.எல்லை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை தொடர்ந்து மதுரை காளியம்மன், ஓலை பிடாரி அம்மன் திருத்தேர்கள் வானப்பட்டறை மைதானத்தை நேற்று இரவு வந்தடைந்தது.
இதையடுத்து பிரம்மாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அப்போது வானில் வண்ணமயமான வாணவெடிகள் வெடித்தது. சரம் சரமாக சென்ற வாணவெடிகள் காண்போரை கவரும் விதமாக பல வண்ணங்களில் வெடித்து சிதறியது. அதிர்வேட்டுகளும், புஸ்வானம், விசில் வெடிகள் வெடித்து காண்போரை பரவசத்தில்
ஆழ்தியது. வாண வேடிக்கை நிகழ்ச்சியை காண பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். திருச்சி போலீஸ் எஸ்.பி செல்வநாகரத்தினம் பக்தர்களுடன் சேர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சியை கண்டு களித்தார். போலீஸ் ஏடிஎஸ்பிகள் கோபால சந்திரன், கிருஷ்ணன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.