தாளக்குடி அய்யன்வாய்க்கால் பாலம் சேதம் : பாதை துண்டிப்பு

0 252
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27   திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாய்க்கால் பாலம் திடீரென உடைந்து விழுந்து பாதை துண்டிக்கப்பட்டது பார்வையிட்ட அதிகாரிகள் மெத்தனமாக பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றுக்கரை மற்றும் தாளக்குடி கிராமத்தையும் இணைக்கும் வகையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே கடந்த 35 வருடங்களுக்கு முன் பாலம் கட்டப்பட்டது.

கொள்ளிடம் ஆற்று கரையோரத்தில் உள்ள விவசாய நிலத்திற்கும், இடுகாட்டிற்கும் செல்ல மிக பிரத்தியேகமாக கட்டப்பட்ட இந்த பாலத்தை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த பாலம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே பழுதடைந்து வலுவிழந்து காணப்பட்டது. இதனை சீரமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து அய்யன் வாய்க்காலில் பாசன நீர் திறந்து விடப்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் ஏற்கனவே வலுவிழந்து காணப்பட்ட பாலம் திடீரென உடைந்து வாய்க்காலுக்குள் விழுந்து பாதை துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடைந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கிராம மக்கள் இந்த பாலத்தை நம்பி உள்ளதால் போர்கால அடிப்படையில் உடனடியாக பாலத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு அதிகாரி ஒருவர் இப்போதுதான் பார்வையிட்டோம் அடுத்து பொறியாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆணை வந்த பின்னரே பணி தொடங்கப்படும் என மெத்தனமாக கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென யாரேனும் கிராமத்தில் இறந்தால் அவர்களை இந்த பாலத்தின் வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் 6 கிலோமீட்டர் சுற்றிவந்து அடக்கம் செய்ய நேரிடும் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பொருட்படுத்தாத வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.