துவரங்குறிச்சி அருகே ரேசன் அரிசி கடத்தியவர் கைது
திருச்சி, ஜூலை 7 திருச்சி மாவட்டம், மணிகண்டம், துவரங்குறிச்சி, மணப்பாறை மற்றும் புத்தாநத்தம் ஆகிய பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் வின்சென்ட் தலைமையில் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் காவலர் உடன் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை உணவுப் பொருள் கடத்தல் சம்பந்தமாக மணிகண்டன் மணப்பாறை புத்தாநத்தம் துவரங்குறிச்சி ஆகிய பகுதியில்ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் பிரிவு ரோடு அருகே மதுரை மாவட்டம், மேலூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாண்டிசெல்வம் (50) என்பவர் இருசக்கர வாகனத்தில் கள்ளச்சந்தையில் வாங்கிய ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி செல்வது தெரியவந்தது. அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்து விசாரித்த போது, 21 மூட்டைகளில் சுமார் 1075 கிலோ ரேசன் அரிசி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பாண்டி செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 1075 கிலோ ரேசன் அரிசி மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.