மணப்பாறை அருகே மூதாட்டி கழுத்து அறுத்துக் கொலை : திருச்சி எஸ்.பி நேரில் விசாரணை
திருச்சி, ஜுலை 12 மணப்பாறை அருகே மூதாட்டி கழுத்து அறுத்துக் கொலை.
திருச்சி எஸ்.பி நேரில் விசாரணை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்தவர் குழந்தை தெரசு வயது (65). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் மகளும் அருகில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். ஓட்டு வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இரவில் வீட்டின் தழ்வாரத்தில் தூங்குவதாக கூறப்படுகிறது.
இரண்டு அறைகளும் பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டின் தாழ்வாராத்தில் கட்டிலில் படுத்திருந்த மூதாட்டி இன்று காலை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மூதாட்டியின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருந்ததுடன் அவர் அணிந்திருந்த 3 சவரன் நகைகளும் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்த தகவலின் பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு செல்வநாக ரெத்தினம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை பார்த்த பின் அக்கம் பக்கத்தில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் திரண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு நாய் மூதாட்டியின் சடலத்தை மோப்பமிட்ட பின் அங்குள்ள கல்லறையின் அருகே நின்று கொண்டது. மேலும் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இதைடுத்து வையம்பட்டி போலீசார் கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.