2026 தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! திருச்சி வேலுச்சாமி பேச்சு

0 472
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 16  2026 தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மட்டும்தான் வரமுடியும். காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி பேச்சு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் அரசியல் அமைப்பை காப்போம் விளக்க பொதுக்கூட்டம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கலந்து கொண்டு பேசுகையில், 1954 ல் காமராஜர் முதல்வராக இருந்த போது பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை அறநிலையத்துறை அமைச்சராக்கிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர் காமராஜர்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ரூ.500 கோடிக்கு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பாலம் அடுத்த நாளே இடிந்து விழுகிறது. ஆனால் காமராஜர் கட்டிய அணை 65 ஆண்டுகளை கடந்தும் ஒரு மதகு கூட உடையவில்லை. தமிழ்நாட்டின் முடிசூடா மன்னனாக முதலமைச்சராக இருந்தவர் காமராஜர். இரண்டு இந்திய பிரதமர்களை உருவாக்கியவர் ஆனால் சாகும்போது 100 ரூபாய் கூட அவரிடம் இல்லை அவரைத்தான் வரலாறு பேசுகிறது.

உலகத்திலேயே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை‌ அஸ்ஸாமில் இருந்து குஜராத் வரை குறுக்கும் நெருக்குமாக தன் பாதத்தாலேயே அழகு பார்த்த ராகுல்காந்தியை பிரதமராக்கினால் நமது வாழ்க்கை பாதுகாக்கப்படும்.

தமிழ்நாட்டில் காங்கிரசும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். இதற்கு முன்னர் எப்படி வேண்டுமானாலும் இருந்து இருக்கலாம் ஆனால் தற்போது எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சியின் கவுரவத்திற்கு இழுக்கு வராத சூழ்நிலையில் நமது கூட்டணி இருக்கும்.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் கூட்டணி ஆட்சி மட்டும்தான் வரமுடியும். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சராக இருப்பார்கள். முதலில் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம். பிறகு மத்தியில் ஆட்சிக்கு வருவோம். என அவர் பேசினார்‌. கூட்டத்தில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், நகர தலைவர் முருகேசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.