கழிவுநீரில் விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர் மீட்பு
திருச்சி, நவ.25 மணப்பாறையில் தேங்கி இருந்த மழைநீரில் விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தனியார் மீட்புக்குழுவினர்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தின் எதிரே முட்புதர்களுக்கு நடுவில் தேங்கி இருந்த கழிவுநீருக்குள் ஒருவர் கிடந்தார். நடுங்கிய நிலையில் கண்களை மூடி, மூடி திறந்தபடி கூனி குறுகிக் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி மணப்பாறையில் உள்ள தனியார் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தனியார் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அதில் பணியில் இருந்த பெண் பணியாளர் ஒருவர் மற்றொருவருடன் சேர்ந்து கழிவுநீரில் கிடந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை விரைந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழிவுநீரில் கிடந்த வாலிபர் நீண்ட நேரம் நீரில் கிடந்ததுடன் காலையில் இருந்து மழையும் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் குளிரில் நடுங்கியபடி இருந்தார். அவரால் ஏதும் பேச முடியாத நிலையில் தலையில் காயத்துடன் இருந்ததால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இருப்பினும் சுமார் 40 வயது இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.