மணப்பாறை அருகே சாலையை அடைத்ததை கண்டித்து கிராம மக்கள் மறியல்
திருச்சி, ஜன.7 மணப்பாறை அருகே சாலையை அடைத்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னுசிங்கம்பட்டியில் இருந்து கோட்டை கீழையூர் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தனியார் தனக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காலம் முழுவதுமாக பயன்படுத்தி வரும் சாலையை தனியார் தனக்கு சொந்தமான இடம் என்று கூறி வருவதோடு, சாலையை அடைத்து விட்டதால் உரிய நடவடிக்கை எடுத்து உடனே சாலை அமைத்திட வலியுறுத்தி மணப்பாறை கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து சுமார் 1 ½ மணி நேரம் பாதிக்கப்பட்டது.