துறையூரில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது
திருச்சி, ஜன.10 துறையூரில் பல கோடி ரூபாய் சீட்டு மோசடி: தலைமறைவாக இருந்த உரிமையாளர் அதிரடி கைது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த காளிப்பட்டி பகுதியில் ‘மாரியம்மன் சிட்பண்ட்ஸ்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை அப்பாதுரை என்பவர் நடத்தி வந்தார்.
இந்த நிறுவனத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முதிர்வுத் தொகை மற்றும் கூடுதல் வட்டி ஆசையில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், முதிர்வு காலம் முடிந்தும் முதலீடு செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தராமல் அப்பாதுரை காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தைத் தராமல் அவர் தலைமறைவானதை அடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
தலைமறைவாக இருந்த அப்பாதுரையைத் தீவிரமாகத் தேடி வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இன்று அப்பாதுரையை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைதான அப்பாதுரையிடம் மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு மற்றும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலீசாரின் முக்கிய அறிவிப்பு இந்த மாரியம்மன் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் தகுந்த ஆவணங்களுடன் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.