காவிரி – அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி ஆளுநரிடம் பாரம்பரிய விதை மீட்பு விவசாயி மனு
திருச்சி, பிப்.9 காவிரி – அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி ஆளுநரிடம் பாரம்பரிய விதை மீட்பு விவசாயி மனு
அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் காவிரி அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை மனு அளித்த நிகழ்வு பசுமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முசிறி அருகே உள்ள திண்ண கோணம் கிராமத்தைச் சேர்ந்தபாரம்பரிய விதை மீட்பு விவசாயி யோகநாதன் அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களை காவிரி ஆறு செழிக்க வைக்கின்றது. இதனைப் போலவே திருச்சி மாவட்டத்தில் இருக்கும் 11 தாலுக்காவில் வறண்ட பகுதிகளாக இருக்கும் முசிறி, துறையூர் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளின் வாழ்வாதாரமாகத் ‘அய்யாறு’ என்ற ஆறு இருந்து வருகிறது.
தற்போது
அய்யாறு பாசனப் பகுதிகளில் போதிய நீர் வரத்து இல்லாமல் இந்த ஆறானது வறண்டு உள்ளது . இந்த நிகழ்வு இப்பகுதி விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அய்யாறு என்பது ஐந்து ஆறுகளின் கலவையாகும்.
தா.பேட்டை, உப்பிலியபுரம், துறையூர் பகுதி மக்களுக்கு அய்யாறு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. கொல்லிமலையில் பெய்யும் மழையினால் உருவாகும் காட்டாற்று வெள்ளமே அய்யாற்றின் முக்கிய நீர் ஆதாரம்.
அய்யாறு என்பது தளுகையாறு, கஞ்சன் ஆறு, ருத்திராட்ச கோம்பைஆறு, காணப்பாடி ஆறு மற்றும் குண்டாறு ஆகிய ஐந்து ஆறுகளின் தொகுப்பாகும்.
இந்த அமைப்பின் கீழ் 36 பெரிய ஏரிகளும், 10,086 ஏக்கர் பாசனப் பரப்பும் உள்ளன. ஏரிகள் அனைத்தும் முழுமையாக நிரம்பினால் சுமார் 1099 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்கும் திறன் கொண்டதாகும். இந்த நீர்நிலை, தற்போது மழையை மட்டுமே நம்பி ‘வானம் பார்த்த பூமியாக’ முடங்கிக் கிடக்கிறது.
விவசாயிகள்
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக, காவிரி ஆற்றிலிருந்து அய்யாற்றுக்கு நீரேற்றுப் பாசனத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற வேண்டுகோளை மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர்களிடம் விவசாயிகள் கோரிக்கையாக வைத்துள்ளோம். தற்போது இக்கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், ‘அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்புச் சங்கம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது
விவசாயிகளின் அடிப்படை வேண்டுகோள் என்னவென்றால்
காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை அய்யாற்றுக்குத் திருப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையானது ஆகும். மேலும் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிற்கு பம்பிங் முறையில் தண்ணீரைக் கொண்டு வந்து திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள திருஈங்கோய்மலை பகுதியில் காவிரி ஆற்றில் ஒரு நிரந்தரத் தடுப்பணையை கட்டி, அங்கிருந்து வெறும் 40 கிலோ மீட்டர் தொலைவிலேயே அய்யாறு பாசனப் படுகையை இணைக்கலாம்.
மேலும், இத்திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த சோலார் மின் திட்டங்களை உருவாக்கலாம் தடுப்பணைப் பகுதிகளைச் சுற்றுலா மையங்களாக மாற்றுவதன் மூலம் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், நெட்டவேலம்பட்டி, ஆலத்துடையான்பட்டி, ஜம்பேரி, சிறுநாவலூர், சேனப்பநல்லூர், திருத்தியமலை, மங்களம், முருங்கப்பட்டி உள்ளிட்ட 36-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேரடிப் பயன்பெறும்.
நெல், வாழை, கரும்பு மட்டுமல்லாது சிறு தானியங்கள் மற்றும் சூரியகாந்தி உற்பத்தியில் இத்தொகுதிகள் முன்னிலை பெறும். தொடர்ச்சியான நீர்வரத்தால் கிணறு மற்றும் போர்வெல் நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக நீங்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு, தமிழக அரசின் வருவாயும் பெருகும்.
முன்னோர்கள் வெட்டி வைத்த வாய்க்கால்கள் இன்று தூர்ந்து போய்க் கிடக்கின்றன. இயற்கை தரும் மழைநீரைச் சேமிக்கத் தவறினால், எதிர்காலச் சந்ததியினரின் விவசாயம் கேள்விக்குறியாகிவிடும். “காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைப் பார்க்கும்போது நெஞ்சம் வலிக்கிறது; அந்தத் தண்ணீர் எங்கள் அய்யாற்றுக்குத் திருப்பப்பட்டால் இந்தப் பகுதியே நந்தவனமாகும்” என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
எனவே வருடம் முழுவதும் அய்யாற்றில் நீர்வரத்தை உறுதி செய்யும் நோக்கில் அய்யாற்றில் காவிரி நீர் வருவதற்கான
திட்டத்தைச் செயல்படுத்தி தர உதவி செய்திடுமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. முசிறியை சேர்ந்த விவசாயி ஆளுநரிடம் விவசாயிகளின் கோரிக்கையை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது வரவேற்பு பெற்றுள்ளது.